விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்! சரமாரி புகார்களுக்கு பதில் தர முடியாமல் திணறல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்! சரமாரி புகார்களுக்கு பதில் தர முடியாமல் திணறல்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

விழுப்புரம் : விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் துறை அதிகாரிகள் பங்கேற்காததால், விவசாயிகளின் புகார் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கீழ்நிலை அதிகாரிகள் திணறினர்.விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.விக்ரவாண்டி தாசில்தார் இளவரசன், திருவெண்ணைநல்லுார் பாஸ்கரதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் ஜெயலட்சுமி, கணேசன், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 2 முறை வழங்கப்படும் நிதியுதவி ஏராளமான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதற்கு பதில் அளித்த வேளாண் உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன், 'கிசான் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு நிதி உதவி அளிக்க முடியும்.

ஆனால், மாவட்டத்தில் ஒரே பட்டா, சிட்டா வைத்து ஒரே குடும்பத்தில் பலர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.மாவட்டம் முழுதும் 30 ஆயிரம் பேர் இதுபோல் போலியாக இணைந்துள்ளனர். இதனால் உண்மையான பயனாளிகள் யார் என்பதை கண்டறியும் பணி நடக்கிறது.யாருக்கேனும் நிதி வரவில்லை என்றால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார், பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் வேளாண் துறை அலுவலகத்தை அணுகினால், நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் தெரிவதில்லை. ஒரு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகள் சலுகை காண்பித்து, திட்ட சலுகைகளை அளிக்கின்றனர்.இடுபொருட்களை ஒரு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்கக் கூடாது. மானியத்தில் வழங்கும் இயந்திரம் உள்ளிட்டவை அரசியல் குறுக்கீடு இன்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

பூச்சி மருந்து கடைகளில் போலி பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. ரசீது வழங்கப்படுவதில்லை. தரமற்ற விதைகள் விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் பூச்சிக் கொல்லி, விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.பட்டா மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் குறித்து தாலுகா அலுவலகத்தில் விளம்பர பலகை அமைக்க வேண்டும்.விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்திற்கு பெரும்பாலான அதிகாரிகள் வருவதில்லை என சரமாரியாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.அதிகாரிகள் 'ஆப்சென்ட்'விவசாயிகளின் குறைகளுக்கு விளக்கம் அளிக்க பொதுப்பணி, மின்துறை, ஊரக வளர்ச்சி, வட்டார வளர்ச்சி அலுவலக உயர் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.கோலியனுார் கோட்டம், முகையூர் கோட்டத்தில் ஒரு அதிகாரிகள் கூட விரவில்லை. சில துறைகளில் கணக்கிற்கு சில கீழ்நிலை ஊழியர்கள் பங்கேற்றனர்.

விவசாயி ஒருவர் கண்டமங்கலம் பகுதியில் எத்தனை ஏரிகள் உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் ஒரு அதிகாரி விழித்தார்.இதுபோல் பல துறைகள் சார்பில் வந்த கீழ்நிலை ஊழியர்கள் விவசாயிகளின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேசுகையில், 'குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும். வரும் ஜூலை 6ம் தேதி நடக்கும் கூட்டத்தில், விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தகுதியுள்ள அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்படும்' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X