மாநகராட்சி சார்பில் கடலுாரில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட தேர்வு செய்யும் இடத்திற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கடந்த செப்டம்பரில் கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் ஊராட்சியில் 90 ஏக்கரில் ஏற்கனவே செயல்பட்டு கைவிடப்பட்ட விதைப் பண்ணை நிலத்தை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.அந்த இடத்தை கடந்த செப்., 9ம் தேதி பார்வையிட சென்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து, கூத்தப்பாக்கம் கான்வென்ட் பஸ் நிறுத்தம் அருகில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர்.
இதற்கும் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் கடலுார் மாநகராட்சியினர், குப்பை கொட்ட இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் ஜவான்பவன் சாலையோரம் கெடிலம் ஆற்றிலும் தென்பெண்ணையாற்று பகுதியிலும் குப்பைகளை கொட்டி மாநகராட்சியினர் சமாளித்து வருகின்றனர்.இதனால் பல இடங்களில் குப்பைகளையே அள்ளாமல் ஊழியர்கள் அப்படியே தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுசூழல் பாதிக்கிறது.
உலக வெப்பமயமாதலையொட்டி போகி பண்டிகைக்கு கூட பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பதை தவிர்த்து வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே குப்பைகளை குவித்து தீ வைத்து எரிப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.