கோவை: வாலிபர் கொலை வழக்கில், வங்கி உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை தனிக்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, ராமநாத புரத்தை சேர்ந்த ரமேஷ்,30; நகை கடை ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தார். மது மற்றும் கஞ்சா குடிக்கும் பழக்கம் கொண்ட அவருக்கு ரைசா என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும், செல்வ புரம் அருகே பனைமரத்துாரில் வசித்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரைசா கோபித்துக்கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார்.
இதனால் ரமேஷ் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இரவில் துாங்குவது வழக்கம். அப்போது, மனைமரத்துாரை சேர்ந்த கவின்மூர்த்தி,27, என்பவருடன் நட்பு ஏற்பட்டது. கவின் மூர்த்தி, திருப்பூரிலுள்ள வங்கி ஒன்றில் உதவியாளராக பணியாற்றினார். இருவரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து விட்டு கோவில் திண்ணையில் துாங்கினர்.
கவினிடம் ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு ரமேஷ் தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 2020, ஜூன், 6ல், நள்ளிரவில் துாங்கி கொண்டிருந்தபோது, மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் கவின் மூர்த்தி ஆத்திரமடைந்து ரமேஷை கத்தியால் குத்திக் கொலை செய்தார். செல்வபுரம் போலீசார் விசாரித்து, கவின் மூர்த்தியை கைது செய்து, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட கவின் மூர்த்திக்கு ஆயுள் சிறை, 2,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.