தேங்காய் விலை சரிவதால் அதிருப்தி: மாற்றி யோசிக்க அரசுக்கு நெருக்கடி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தேங்காய் விலை சரிவதால் அதிருப்தி: மாற்றி யோசிக்க அரசுக்கு நெருக்கடி
Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
 

பொள்ளாச்சி: விவசாயிகளிடம் இருந்து, தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, பொள்ளாச்சியில், ஜூலை 13ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.latest tamil newsதேங்காய்க்கு விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் படும் துயரத்தை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து, மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பின் கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.

சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பத்மநாபன், கிருஷ்ணசாமி, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் தாத்துார் கிருஷ்ணசாமி, தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஜெய்மணி மற்றும் பலர் பங்கேற்று பேசினர்.

தென்னை விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கையை விவசாயிகளுக்காக முழு ஈடுபட்டோடு செயல்படுத்தும் முதல்வர், தென்னை விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களை களைய வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து தினமும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு, உணவு தேவைக்காகவும், மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றவும், தினமும், 6 கோடி ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடக்கும். தற்போது, தினமும் இரண்டு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடக்கிறது.

விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேங்காயை இருப்பு வைக்கின்றனர். அதிக நாட்களுக்கு இருப்பு வைத்தாலும் பாதிப்பு ஏற்படும். தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொப்பரை தயாரிப்பதில் பருவமழைக்காலம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார சிக்கல்களால், கொப்பரையை உற்பத்தி செய்ய இயலவில்லை.

விவசாயிகளிடம் இருந்து, நேரடி நெல் கொள்முதல் செய்வது போன்று, தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். அனைத்து விவசாயிகளிடம் இருந்து, தேங்காய் கிலோ, 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க, அரசு கொப்பரை கொள்முதல் துவங்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில், 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் முழுமையாக அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெற இயலவில்லை.


வெளி மார்க்கெட்டில், தற்போது கொப்பரை விலை, 82 ரூபாயாக உள்ளது. விலை வீழ்ச்சியை தடுக்க, அரசின் கொள்முதல் குறியீட்டு இலக்கை அடைய போர்க்கால அடிப்படையில், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கிலோவுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, 150 ரூபாய் நிர்ணயம் செய்ய மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, மானியத்தில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து, தமிழகத்தின் தென்னை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய செயல்முறை பண்ணை விளக்கதிட்டம், தென்னை மறு நடவு திட்டம், போன்ற திட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைக்கப்பெறாமல் உள்ளது.

அவற்றை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்லவும், தென்னை விவசாயிகளின் நலனுக்காக தென்னை நல வாரியத்தை உடனடியாக அரசு அமைக்க வேண்டும்.இந்த கோரிக்கைளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ஜூலை 13ம் தேதி, பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.ஜூலை 13ல் குடும்பத்துடன் பங்கேற்போம்!தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சியில், ஜூலை 13ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.இதில், தென்னை உற்பத்தியாளர்கள், அவரவர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும். அதிகளவு பெண்கள் பங்கேற்க வேண்டும். தேங்காய்க்கு விலை கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண, அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும், என முடிவு செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X