''ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று பெரியளவில் இல்லை,'' என, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், மொத்தம் நான்கு இடங்களில், 3.23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், வளர்ச்சி திட்டப்பணிகளை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று துவக்கி வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த ஓராண்டு கால ஆட்சியில், பல திட்டங்கள் துவங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல திட்டங்கள் நடந்து கொண்டும் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 85 திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறோம். இன்னும் மேலும் பல புதிய திட்டங்கள் சேர்க்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் துவங்கி நடக்கிறது. பட்டா வழங்கல், கட்டிய வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கி கொடுத்தல் என பல்வேறு பணிகள் நடக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இன்னும் எத்தனை பேருக்கு வீடுகள் தேவை
உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.
அதன்பின், தேவையறிந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று பெரியளவில் இல்லை. இதுவரையில் மொத்தம், 15 பேர் மட்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், மாஸ்க் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும், என தமிழக அரசு
சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால், கடந்த முறை போன்று தொற்று பாதிப்பில்லாமல், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். கொரோனா தொற்றை தடுக்க, தேவையான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பால், இதுவரையில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதுபோன்று ஏதும் நடக்காத வகையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'கொரோனாவால் உயிரிழப்பு இல்லை'
கோபி அருகே மணியகாரன்புதுாரில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி கட்டடத்தை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். அப்போது ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை, 15 பேருக்கு பாதித்துள்ளது. அதனால், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியதால், அங்கும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களில், 15 வயதுக்கு உள்ளேயும், அதற்கு மேலேயும் வயதுடையவர்களுக்கும், தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்றால், இதுவரையில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.