நங்காஞ்சி ஆற்றில், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலுார் மலையில், வடகாடு கிராமம் உள்ளது. இங்குள்ள பரப்பணாறு அணையில் தேக்கப்படும் நீரிலிருந்து, நங்காஞ்சி ஆறு உற்பத்தியாகி, அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளி அமராவதி ஆற்றில் சங்கமிக்கிறது. இந்த ஆறு திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாபுரம், சடைய குளம், ஜவ்வாது, கரூர் மாவட்டத்தில் கோரையூத்து ஆகிய அணைகளை கடந்து, அமராவதியை
அடைகிறது.
இந்நிலையில், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சியில் உருவாகும் சாக்கடை கழிவுநீர் முழுவதும் நங்காஞ்சி ஆற்றில் கலக்கிறது.மேலும், சீமைக்
கருவேல மரங்கள் முளைத்தும், புதர் மண்டியும் நங்காஞ்சி ஆறு, கழிவுநீர் குட்டைபோல் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: இந்த ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சிகளின் கழிவுநீர், ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றின் இருகரைகளிலும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நங்காஞ்சியை நம்பியுள்ள, 2,500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதில் பாதிப்பு ஏற்படாது. மேலும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.