ஆறு மாதத்துக்கு ஒருமுறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர் தனியார் மண்டபத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமைவகித்து பேசியதாவது:
இனி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவி பெறும் பயனாளிகள் பட்டியலில், உங்கள் பகுதியில் விடுபட்ட பயனாளிகளின் பெயர்களை சேர்க்க வேண்டும். 'தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் என்ற நிலையை கொண்டு வரவேண்டும்' என, முதல்வர் கூறி வருகிறார்.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், வாக்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ளாமல், அனைவருக்குமான மக்கள் பிரதிநிதிகள் என மனதில் கொண்டு, மக்கள் பணியாற்ற வேண்டும். முதியோர் உதவித்தொகை, சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.