அமராவதி அணையிலிருந்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், நெல் சாகுபடிக்காக, சோளம் பயிரிட்ட விவசாயிகள், அறுவடை பணிக்கு தயாராக உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதிகள், அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளன.
அமராவதி ஆற்றுப்பகுதியில் உள்ள, 18 பழைய வாய்க்கால்கள் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 25 ஆயிரத்து, 248 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நீர்மட்டம், 60 அடியை தாண்டிய நிலையில் திருப்திகரமாக உள்ளதால், நெல் சாகுபடி பணிக்காகவும் வரும், ஜூலை மாதம், இரண்டாவது வாரத்திலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளான க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கரூர் வட்டார பகுதிகளில், பருவ மழையை நம்பி சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், முற்றிய நிலையில் அறுவடை செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து, நெல் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.