ஜெ., கார் டிரைவரின் மனைவியிடம் வழக்கை திரும்ப பெறும்படி, கொலை மிரட்டல் விடுத்து, மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் கனகராஜின் அண்ணனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே,
சித்திரபாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 36; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணிபுரிந்த இவர், கடந்த, 2017 ஏப்., 28ல்
ஆத்துார் புறவழிச்சாலையில் பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். அதே ஆண்டில், ஏப்., 23ல், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
சென்னை, கே.கே., நகர், பாலை தெருவில் வசித்து வரும், கனகராஜ் மனைவி கலைவாணி, 28, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குடன், கனகராஜ் மர்ம சாவு குறித்த வழக்கையும் சேர்த்து, கோவை மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் ஆதாரங்கள், சாட்சிகளை கலைத்ததாக கனகராஜ் அண்ணன் தனபாலை, கடந்த 2021, அக்டோபர் மாதம் கைது செய்தனர். சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமின் பெற்று சமீபத்தில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கனகராஜ் மனைவி கலைவாணி, கடந்த, 27ம் தேதி ஜலகண்டாபுரம் போலீசில் அளித்துள்ள புகார் மனு விபரம்:
என் கணவர் கனகராஜின் பெயரில் பணிக்கனுாரில் உள்ள நிலத்தை விற்றுத்தருவதாக, அவரது அண்ணன் பழனிவேல் கூறினார். கடந்த, 3ம் தேதி, 11:00 மணிக்கு, என் அண்ணனுடன், தாரமங்கலத்துக்கு வந்தேன்.
ஒரு பேக்கரிக்கு அழைத்துச் சென்று பேசிய பழனிவேல், குழந்தைகளை தாத்தா, பாட்டி பார்ப்பதற்கு வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
நிலம் விற்பதற்கு சென்றபோது, அவர் பிரச்னை செய்தார். எதற்கு இப்படி செய்கிறீர்கள் என்றபோது, என் தம்பியின் சொத்து மட்டும் கேட்கிறியே, நீ கொடுத்த புகாரால் என் அண்ணன் தனபால் சிறைக்கு போய்விட்டார். இதுவரை, நான்கு லட்சம் ரூபாய் செலவு ஆகிவிட்டது. அந்த பணம் கொடுத்துவிட்டு, வழக்கை வாபஸ் பெற்றால் தான், நிலத்தை விற்றுக் கொடுப்பேன் என கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்தால், நீ இங்கே இருந்து, சென்னைக்கு போக முடியாது. இது எங்க ஊரு, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று, தகாத வார்த்தையால் திட்டினார். இதைப்பற்றி ஏன் போலீசாரிடம் சொன்னாய் என்றும்
மிரட்டினார்.
நான் பயந்து போய் தப்பி வர முயன்ற போது, என்னை அசிங்கப்படுத்தி தகராறு செய்தார். எனக்கும், என் குழந்தைக்கும் உயிர் பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் படி, கனகராஜின் அண்ணன் பழனிவேல், 44, மீது, தகாத வார்த்தையில் திட்டுதல், அச்சுறுத்தல், கொலை மிரட்டல், பெண்ணிடம் வன்முறையில் ஈடுபடுதல், பெண் வன் கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து, கனகராஜியின் தாய் சித்தாயி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கனகராஜின் நிலம் விலை பேசினர். குறைவாக கேட்டதால் பொருத்திருந்தால் விற்று கொடுப்பதாக கூறினோம். எனக்கு நிலத்தை விற்றுக் கொடுங்கள் என்று மருமகள் கலைவாணி கூறினார். நிலத்துக்கு முன்பணம் கொடுக்க வந்தபோது, நிலம் விற்கவில்லை என்றார்.
மாலை நேரத்தில் குழந்தைகளுடன் சென்றதால், இந்த நேரத்தில் போக வேண்டாம் என்று குழந்தையை இழுத்தபோது, சேலையை பிடித்து இழுத்துவிட்டதாக, கலைவாணி, என் மகன் பழனிவேல் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.