ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய, 130 கிலோ தங்கத்தை, வங்கியில் முதலீடு செய்ய, அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை, வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:பக்தர்கள் காணிக்கையாக வழங்கி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தங்கத்தை உருக்கி, வங்கியில் முதலீடு செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை, அக்கோவில் திருப்பணிக்கு பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
முதற்கட்டமாக, விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 27 கிலோ நகை உருக்கப்பட்டு, வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இதில் கிடைக்கும் இரண்டு லட்சம் ரூபாய், அக்கோவில் திருப்பணிக்கு செலவிடப்படுகிறது.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், பக்தர்கள் வழங்கிய தங்கத்தில் இருந்து, கற்கள் பிரித்து எடுத்ததில், 130 கிலோ தங்கம் கிடைத்தது. இதை, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்து உள்ளோம். இதை உருக்கி, வங்கியில் வைப்பு நிதியாக்கி, அதன் வாயிலாக கிடைக்கும் வட்டியில், கோவில் திருப்பணிகள் நடக்கும்.
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களுக்கு விரைவில் தங்கத்தேர் செய்யப்படும்.சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, வரும் நவம்பரில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்; சிதம்பரம் கோவில் பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அறநிலையத் துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.