விவசாயி சாவு
செஞ்சி: வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 45; விவசாயி. இவரது விவசாய நிலம் புலிவந்தி ரோட்டில் உள்ளது. நேற்று முன்தினம் விவசாய வேலைகளை முடித்துவிட்டு இரவு மாட்டு வண்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடு மிரண்டு ஓடியதால், கணேசன் மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்தார். அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நண்பரை தாக்கியவர் மீது வழக்கு
விழுப்புரம்: வி.அகரத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 38; குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழழகன், அருள், நாராயணசாமி ஆகியோர் மது குடித்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் சுதாகரை, தமிழழகன் திட்டி தாக்கினார்.புகாரின் பேரில், தமிழழகன் மீது வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மாணவியை கடத்தியவர் மீது வழக்கு
விழுப்புரம்: ஆயந்துாரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி; பிளஸ் 2 படிக்கும் இவர், கடந்த 29ம் தேதி வீட்டிலிருந்தவரை காணவில்லை. விசாரித்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், வேலியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் அஜீத், 21; என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில், அஜீத் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண் தீக்குளிப்பு: போலீஸ் விசாரணை
விழுப்புரம்: சாலாமேட்டைச் சேர்ந்தவர் ராஜவேல், 38; இவரது மனைவி சரண்யா, 35; இருவருக்குமிடையே நேற்று முன்தினம் பிரிட்ஜ் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், நேற்று காலை 11:00 மணியளில், சரண்யா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ராஜவேல் தீயை அணைக்க, முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பேக்கரியில் ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரம்: பெரியார் நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 45; அதே பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை கடைக்கு சென்றபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும், சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நபர் திருட்டில் ஈடுபட்டது தெரியந்தது.இதேபோன்று, அருகிலிருந்த மணி என்பவரின், பங்க் கடை பூட்டை உடைத்து, 2000 ரூபாய் திருடு போனது. விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் ஆபாச படம்: மர்ம நபர்களுக்கு வலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் மொபைல் ஆப் மூலம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை முழுமையாக செலுத்திவிட்ட நிலையில், கடன் தொகையை மேலும் செலுத்த வேண்டும் என மொபைல் ஆப் நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். அந்த பெண் 3 லட்சம் வரை மொபைல் ஆப் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். ஆனால், மொபைல் ஆப் நிறுவனத்திற்கு பணத்தை செலுத்த வில்லை என, அந்த பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, அவரது மொபைல் எண்ணில் இருந்த அனைத்து எண்களுக்கும் மர்மநபர்கள் அனுப்பி வைத்தனர். மேலும், சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
திருக்கோவிலுார்: துறிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமதுஅலி. இவரது 17 வயது மகள் கடந்த 27ம் தேதி காலை 9:00 மணியளவில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.