தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, 16 வயது சிறுமி குளிப்பதை 'வீடியோ' எடுத்து, அதை காட்டி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, 16 வயது சிறுமி, வீட்டுக்கு பின்னால் குளித்துக் கொண்டிருந்ததை, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், மறைந்திருந்து மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, மிரட்டி, பலாத்காரம் செய்த சிறுவன், வீடியோ காட்சிகளை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தந்தை, வீடியோ எடுத்த சிறுவனின் தந்தையிடம் புகார் கூறியுள்ளார். எனினும், அதை அவர் கண்டுகொள்ளாததுடன், சிறுமியின் தந்தையை மிரட்டி உள்ளார்.இதனால், திருநீலக்குடி போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். போலீசார் அந்த சிறுவனையும், அவரின் தந்தை பாலகிருஷ்ணன், 42, ஆகியோரை கைது செய்தனர். சிறுவன் சிறார் சிறையிலும், தந்தை கும்பகோணம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.