சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுவர் தென்பட்டுள்ளது.விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதில் குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன.
எட்டாவது குழியில், ஒரே இடத்தில் அருகருகே சுண்ணாம்பு நிரம்பியிருந்த பெரிய பானை கிடைத்தது. புதிதாக தோண்டிய ஒன்பதாவது குழியில் சுடுமண்ணால் ஆன கற்களுடன் கூடிய சுவர் தெரிந்தது. இதனால் இங்கு முன்னோர்கள் வசித்தது உறுதியாகிறது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, தொழில் செய்ததற்கு அடையாளமாக சுண்ணாம்பு நிரம்பியுள்ள பெரிய பானை கிடைத்த நிலையில், முன்னோர் வசித்ததற்கு அடையாளமாக சுவரும் கிடைத்துள்ளது. பக்குவமாக தோண்டி சுவரின் நீளம், அகலத்தை கணக்கிட வேண்டும் என்றார்.