உடுமலை:தேங்காயை அரசு நேரடியாக கொள்முதல் செய்யவும், தென்னை சார் தொழில்களை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலையில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முதல் மாநில மாநாடு நடந்தது. மாநில துணை அமைப்பாளர் முத்துராமு தலைமை வகித்தார்.திருப்பூர் மாவட்டத்தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன் மாநாட்டை துவக்கி வைத்தார்.தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் விஜயமுருகன், விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில் தென்னை, 4.39 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் விலை, 50 சதவீதம் வரை வீழ்ச்சிடையடைந்துள்ளது. ஒரு தேங்காய், 25க்கு விற்ற நிலையில், தற்போது, 10 முதல், 12 ரூபாய் வரை மட்டுமே விற்கிறது.நீண்ட கால பயிரான தென்னையிலிருந்து கிடைக்கும், தேங்காய் உரிமட்டை, சிரட்டை உள்ளிட்ட பொருட்களும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை ரூ.140 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.உரித்த தேங்காய் கிலோ ரூ.50க்கு மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்யவும், ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்கவும், சோப்பு தயாரிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எண்ணெய் வித்து இறக்குமதி வரிகுறைப்பை ரத்து செய்திடவும், தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விதிப்பை ரத்து செய்து செய்ய வேண்டும்.தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்றம் செய்யவும், உடுமலை திருமூர்த்திநகரிலுள்ள தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி நிலையத்தில், தமிழக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.தென்னை பயிர்காப்பீடு திட்டப்பதிவை உறுதிப்படுத்தவும், தென்னை சார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.தென்னை சார் தொழில்கள் பாதுகாக்க, தென்னை வளர்ச்சி வாரியமும், மத்திய கயிறு வாரியமும் மானியங்கள் வழங்கி தொழில்கள் நடைபெற உதவ வேண்டும்.மரம் ஏறுதல், காய் உரித்தல், சுமை பணி, கொப்பரை உற்பத்தி தொழிலாளர்கள் என தென்னை சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய அரசு 'கேர் சுரக்ஸா' இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.தொழிலாளர்கள், 99.65 ரூபாயும், தென்னை வளர்ச்சி வாரியம், 300 செலுத்த வேண்டும். ஆனால், இத்திட்டம் அறிவிப்பு என்ற அளவிலேயே உள்ளது. இத்திட்டத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.தென்னை சார் தொழில்கள் வழியாக, 400க்கும் மேற்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உரிய காய் மட்டை வழியாக, 100க்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.கழிவு நார் பித்திலிருந்து தயாரிக்கப்படும் கட்டிகள் ஏற்றுமதி வாயிலாக, ஆண்டுக்கு, 5 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்து வருகிறது.ஏற்றுமதிக்கான கண்டெய்னர் கிடைக்காதது, சுற்றுச்சூழல் பாதிப்பு என தொழிலை முடக்கும் செயல்களால், தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனவே, தென்னை சார் தொழில்களை பாதுகாக்கும் வகையில், தென்னை வளர்ச்சி வாரியம், காயர் போர்டு உரிய உதவிகளை செய்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத நவீன இயந்திரங்கள் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், வரவேற்பு குழு செயலாளர் பாலதண்டபாணி, தலைவர் ராஜகோபால், மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.