பெரம்பலுார்:பொதுமக்கள் வராததால், புத்தக விற்பனை இல்லாமல், அரியலுார் புத்தகக் திருவிழா களையிழந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, தமிழர் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில், அரியலுாரில் புத்தக திருவிழா நடந்தது.அப்போதைய சப்- - கலெக்டர் சந்திரேசகர சாகமூரி முயற்சியால், கலெக்டர் சரவணவேல்ராஜ் ஒத்துழைப்போடு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்காட்சியை துவக்கி வைத்தார். அந்த புத்தக திருவிழா, அரியலுார் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதில், 2 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகின.
இதனால், தொடர்ந்து, ஐந்தாண்டுகள் புத்தக திருவிழா நடந்தது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தக திருவிழா நடத்தப்படவில்லை. தொற்று குறைந்ததால், கடந்த மாதம் 24 முதல், புத்தக திருவிழா துவங்கியது.எனினும், கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிக மிக குறைவாக உள்ளது. இதில், 83 அரங்குகளில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன.
மேலும், மொபைல் ஏ.டி.எம்., மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவை யும் இடம் பெற்றுள்ளன. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளும் நடக்கின்றன. ஆனால், கடந்த ஆறு நாட்களில் புத்தக திருவிழாவுக்கு வந்தோரின் எண்ணிக்கை, 1,000த்தை கூட தாண்டவில்லை.