சென்னை:ஷேர் ஆட்டோவில் தவற விட்ட 1.50 லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனரை போலீசார் பாராட்டினர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 35. சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பிளம்பிங் பயிற்சி எடுத்து வருகிறார். இதற்கு, கட்டணமாக செலுத்த வேண்டிய 1.50 லட்சம் ரூபாயை, மனைவி நித்யாவிடம் எடுத்து வரக் கூறினார். நேற்று முன்தினம், சென்னை வந்த நித்யா, திருவான்மியூரில் இருந்து நீலாங்கரைக்கு ஆட்டோவில் சென்றார்.அங்கு கணவருடன், உணவகத்துக்கு சாப்பிட செல்லும்போது, பணப்பையை ஆட்டோவில் தவற விட்டது தெரிந்தது. உடனே, நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், 32, மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்லும்போது, ஆட்டோவில் இருந்த பணப்பையை பார்த்தார். பையில் இருந்த மொபைல் போனில் செல்வகுமாரை தொடர்பு கொண்டு, பணம் பத்திரமாக இருப்பதை உறுதி செய்தார். பின், நீலாங்கரை போலீசார் முன், செல்வகுமாரிடம் 1.50 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனரை ராஜசேகரை, செல்வகுமாரும் போலீசாரும் மனதார பாராட்டினர்.