அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை!மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை!மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

கோவை;மாமன்ற சாதாரண கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. காலை, 11:00க்கு கூட்டம் துவங்கி மதியம், 1:40 மணி வரை நடந்த நிலையில், கவுன்சிலர்கள் பலர் வழக்கம்போல் குடிநீர் பிரச்னை, குப்பை வண்டிகள் தேவை குறித்து குமுறினர்.72வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ்: மேற்கு மண்டலத்தில் உள்ள வணிக வளாகங்களில், 90 கடைகளுக்கு ஏலம் விட்டதில், 30 கடைகள் மட்டுமே ஏலம் போனது. அக்கடைகளுக்கு மாமன்ற முன்அனுமதி அளித்து தாமதமின்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.மத்திய மண்டல தலைவர் மீனா: துாய்மை பணியாளர்கள், லாரிகள், தள்ளுவண்டி பற்றாக்குறை குறித்து மூன்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியுள்ளனர். இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே போக முடியாது.சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அழைத்து, சிறு சிறு பொருட்கள் வாங்கித்தர கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்கழிப்பிடம் சரியாக பராமரிப்பதில்லை. அடிக்கடி ஆய்வு செய்து, சரிசெய்ய வேண்டும்.98வது வார்டு கவுன்சிலர் உதயக்குமார்: குறிச்சி-குனியமுத்துார் குடிநீர் திட்டமானது, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ரூ.416 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. சிறுவாணியில் இருந்து வரும் குடிநீரை, பேரூர் ஆவின் அலுவலகம் அருகே இருந்து, 7 கி.மீ., துாரம் பணிகள் செய்து குறிச்சிக்கு கொண்டு வந்திருக்கலாம்.ஆனால், 15 கி.மீ., சுற்றி பிள்ளையார்புரம் மலை மேல், 450 எச்.பி., திறனுடன் அமைக்கப்பட்ட 'பம்பிங் ஸ்டேஷன்' கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டத்தின்போது, குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகியது. இதற்கு மின் கட்டணமாக, மாதம் 2 லட்சம் ரூபாயை மாநகராட்சி செலுத்துகிறது. மின் தடை ஏற்பட்டால் மலையில் இருந்து, தண்ணீர் பின்னோக்கி வந்துவிடும். இத்திட்டத்தால் எந்த பயனும் இல்லை. இதனை கைவிட்டு குறிச்சிக்கு நேரடியாக குடிநீர்கொண்டுவர வேண்டும்.ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன்: ஆளும் கட்சியான தி.மு.க., கவுன்சிலர்கள், தி.மு.க., மேயரை கேள்வி கேட்பது சரியல்ல. உங்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கடிதம் மூலம் மேயரிடம் முன்வைக்கலாம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.தொடர்ந்து, பல கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கோரி எழுந்து குரல் எழுப்பினர். அப்போது பேசிய மேயர் கல்பனா, ''நேரமின்மை காரணமாக அடுத்த மாமன்ற கூட்டத்தில் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும். கவுன்சிலர்கள் தங்களது வார்டு தேவைகளை எனக்கு கடிதமாகவும் தரலாம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X