கோவை:இருவரை கத்தியால் குத்திய வழக்கில், வாலிபருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை, தெற்கு உக்கடம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாபு,33, சின்னவன்,54, ஆகியோர், அதே பகுதியில் வசிக்கும், துாய்மை பணியாளர் நாகராஜ் என்பவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். இது குறித்து, நாகராஜின் மகன் சஞ்சய், இவரது உறவினர் தமிழழகன் ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. 2017, ஜூலை, 25ல் உக்கடம் பைபாஸ் ரோட்டில் சஞ்சய், தமிழழகன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த பாபு, சின்னவன் ஆகியோர் இருவரையும் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த சஞ்சய், தமிழழகன் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர். உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து, பாபு, சின்னவன் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீதான வழக்கு, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி நம்பிராஜன், குற்றம் சாட்டப்பட்ட பாபுவுக்கு, ஏழாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.