விருத்தாசலம்-கரும்பு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேணுகோபால், வெங்கட்ராமன், ராமலிங்கம், தரணிதரன் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பழனிசாமி, பொது செயலர் ரவீந்திரன், உதவி தலைவர் மாதவன், செயலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் அசோகன், ஜனநாயக வாலிபர் சங்க கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.அம்பிகா சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெயரில், ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளை மொட்டை அடித்து விட்டன. விவசாயிகளின் நிலுவை தொகை ரூ.182 கோடி உள்ளது. விவசாயிகளின் பெயரில், ஆலை நிர்வாகம் வங்கிகளில் ரூ.300 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளது.இரண்டு ஆலைகளையும் அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து, விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்' என்றார்.