சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் இருப்பு குறைவு,
அரிசி ஆலைகளுக்கு அரிசி கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க
மாதத்திற்கு ஒரு நாள் 'ரெய்டு' நடத்த வேண்டும் என மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், பாம்கோ, டி.என்.சி.எஸ்.சி., மூலம் 829 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் 10 தேதிக்கு மேல் சென்றால் பொருட்கள் இல்லை என கூறி மக்களை விற்பனையாளர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு விற்பனையாளர்களும் தங்களுக்கு வேண்டிய நபரை வைத்து கொண்டு டூ வீலரில் மூடை மூடையாக அரிசியை கடத்தி அரிசி ஆலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று மாதம் லட்சக்கணக்கான ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். ஆனால் அரசு வழங்கும் மானிய விலை அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை.
மாதந்தோறும் 'ரெய்டு' அவசியம்
இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க கடந்த மாதம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் வருவாய், கூட்டுறவு துறையினர் கடைகளில் திடீர் ரெய்டு நடத்தினர். அதில் இருப்பு குறைவு, அரிசி ஆலைகளுக்கு அரிசி மூடைகளை கடத்தியவர்கள் சிக்கினர். அரிசி கடத்தலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதித்தனர். இருப்பு குறைவாக இருந்த ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் திடீர் ரெய்டால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து தரமான உணவு பொருள், சரியான எடையில், போதிய அளவிற்கு கொடுத்தால் தவறு நடக்க வாய்ப்பே இருக்காது என தெரிவிக்கின்றனர். இது போன்ற முறைகேடுகள் தொடராமல் மக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க செய்ய, மாதந்தோறும் இது போன்று ரகசிய ரெய்டு நடத்த வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.