24 மணி நேர சீரான குடிநீர் வினியோகத்திற்கு ரூ.5,000 கோடி: 10 மண்டலங்களில் செயல்படுத்த திட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
24 மணி நேர சீரான குடிநீர் வினியோகத்திற்கு ரூ.5,000 கோடி: 10 மண்டலங்களில் செயல்படுத்த திட்டம்
Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 

சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 10 மண்டலங்களில், பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை அகற்றி, அங்கு புதிய குழாய்களை பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 5,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.latest tamil newsசென்னை மாநகராட்சியில் தற்போது, 15 மண்டலங்கள் உள்ளன. ஆனால், புறநகர் பகுதிகளை இணைத்து மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன், 10 மண்டலங்களுடன், மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டது. இதில், 4,100 கி.மீ., துாரத்தில், 100 முதல் 1,000 மி.மீ., விட்டம் கொண்ட குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளுக்கு, தினமும் குழாய் மற்றும் லாரி வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 16 இடங்களில், நீரேற்று நிலையங்கள் செயல்படுகின்றன.குடிநீர் தேவை அதிகரிப்புஇதில், 10 மண்டலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள், 30 முதல்50 ஆண்டுகள் பழமையானவை. இவை, அப்போதையை மக்கள் தொகைக்கு ஏற்ப பதிக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன், காலி மனைகளாக இருந்த பல இடங்களில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

அதே போல், சென்னையில் இருந்த தனி வீடுகள் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிஉள்ளன.இதனால், மக்கள் தொகை அதிகரித்து, அவர்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போதுள்ள சூழலில், சென்னையை சுற்றிஉள்ள ஏரிகளில் இருந்தும் கிடைக்கும் நீர் மற்றும் கடல் நீரை சுத்திகரித்து பெறப்படும் குடிநீர் ஆகியவற்றால், போதுமான குடிநீர் கையிருப்பு உள்ளது. ஆனால், அதை தேவைக்கு ஏற்ப பயனாளிகளுக்கு வினியோகம் செய்வதில், குழாய்களின் அளவு போதுமானதாக இல்லை.

நீரேற்று நிலையங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு விரைவாகவும், துாரம் அதிகரிக்கும் போது, வேகம் குறைவதால், குறைந்த அளவிலும் குடிநீர் வினியோகம் செய்யும் சூழல் உள்ளது. பல இடங்களில் வரி செலுத்தியும் குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளன.


இதற்கு தீர்வு காணும் வகையில், அனைவருக்கும் சமமான குடிநீர் வினியோகம் செய்ய, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.இதற்கு, சேதமடைந்த, அழுத்தம் குறைவான, நீரோட்டம் இல்லாத குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.நம்பிக்கைமேலும், வீடுகளை கணக்கிட்டு மற்றும் விடுபட்ட தெருக்களில் குழாய் பதிப்பது, சீரான குடிநீர் செல்கிறதா என்பதை கண்டறிய தெருக்கள், நீரேற்று நிலையங்கள், வீடுகளில் மீட்டர் பொருத்துவது, நீரேற்று நிலையங்களில் அதிக திறன் கொண்ட மோட்டர் பொருத்துவது போன்ற மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன.

இதற்கான, மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு உத்தேசமாக, 5,000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, பொதுமக்களுக்கு 24 மணி நேரம் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதுடன், குடிநீர் வீணாவது தடுக்கப்படும் என, வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமும், ஒரு நபருக்கு, 135 லிட்டர் குடிநீர் தேவை. தற்போதைய குழாய்கள் மிகவும் பழமையானது என்பதால், அவற்றில் பல சேதமடைந்துள்ளன. இதனால், சீரான நீரோட்டம் இல்லை. தேவைக்கு ஏற்ப குடிநீர் கையிருப்பு இருந்தும், அதை சமமாக வினியோகம் செய்ய முடியவில்லை. குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. முறையாக செயல்படாத குழாய்களை மாற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்க உள்ளோம். சமமான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய, மீட்டர் பொருத்தப்படும். தொலைநோக்கு பார்வையில் இத்திட்டம் அமையும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்மேம்பாட்டு நடவடிக்கைக்கு பின்...= அனைத்து வீடுகளுக்கும் தேவைக்கு ஏற்ப, சமமான அளவு குடிநீர் வினியோகம் கிடைக்கும்
= மீட்டர் பொருத்துவதால், தெரு குழாய்களில் செல்லும் குடிநீர், சீரான நீரோட்டத்தில் செல்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்
= சாலை மட்டத்தை கணக்கிட்டு குழாய் பதிப்பதால், குறைந்த அழுத்தம் பிரச்னை ஏற்படாது= லாரி குடிநீர் தேவை ஏற்படாது
= வீடுகளில் மீட்டர் பொருத்தவதால், மின்சார சிக்கனம் போல், குடிநீர் தேவைக்கு ஏற்ப, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்
= குடிநீர் வாரியத்திற்கு நிதியும் அதிகரிக்கும் என்பதால், அதற்கு ஏற்ப, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்
= தற்போது, பல்வேறு வகைகளில், 30 முதல் 40 சதவீதம் வரை குடிநீர் வீணாகிறது. இதற்காக, வாரியத்திற்கு ஆகும் செலவு மிச்சமாகும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X