சமீபகாலமாக பாலங்கள், புறவழிச்சாலைகள் போன்ற பணிகள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டிருப்பதாக மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.
இந்தக் குறையைத் தீர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காகவே, ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கி, கடந்த ஜனவரியில் அரசாணை (எண்:8 தேதி: 13-01-2022) வெளியிடப்பட்டது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. கடந்த மே மாதத்தில், இந்த பிரிவுகளின் எண்ணிக்கையை14 ஆக உயர்த்தி, அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இவற்றில், கோவையை தலைமையிடமாகக் கொண்டும் ஒரு சிறப்புப் பிரிவு துவக்கப்பட்டது. சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் ஒரு நிர்வாக யூனிட் அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், இரண்டு தாசில்தார்கள் தலைமையில் களப்பணி யூனிட் அலுவலகங்கள், தெற்கு தாலுகா அலுவலகத்திலும் திறக்கப்பட்டன. சிறப்பு டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்ட வேணு சேகரன், கடந்த ஏப்., 25ல் பொறுப்பேற்றார்.
இங்கு பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே, அவர் விடுமுறையில் சென்று விட்டார். கலெக்டர் உத்தரவின்பேரில், கடந்த மாதத்தில்பணிக்குத் திரும்பிய அவர், நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து மாதங்களாக டி.ஆர்.ஓ., இல்லாததால், கீழுள்ள அதிகாரிகளும் ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொள்கின்றனர். கடந்த ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டு துவக்கப்பட்ட சிறப்புப் பிரிவு, இதுவரையிலும் எந்தவொரு திட்டத்துக்கும், நிலம் கையகப்படுத்தும் பணியை வெற்றிகரமாக முடித்ததாகத் தெரியவில்லை.
அவினாசி ரோடு மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மேம்பாலங்கள் என மொத்தம் 24 பணிகள், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலங்கள், பை-பாஸ் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால்தான், ஆண்டுக்கணக்கில் இழுக்கின்றன; பயனற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டு வருகின்றன. இவ்வளவு அதிகமான பணிகள் நடக்கும் ஒரு மாவட்டத்துக்கு, ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒருவரை, டி.ஆர்.ஓ.,வாக நியமித்தது ஏனென்பது புரியாத புதிராக உள்ளது.
அடுத்ததாக, புதிய டி.ஆர்.ஓ., எப்போது நியமிக்கப்படுவார், அவர் எப்போது பணியில் பொறுப்பேற்பார், அவராவது இங்கு பணியில் நீடிப்பாரா என்பதெல்லாம் தமிழக அரசுக்கே வெளிச்சம். கோவையில் கடந்த ஓராண்டாக, நெடுஞ்சாலைத்துறையால் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் பழைய திட்டங்களையாவது வேகப்படுத்த, சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டியது, அரசின் அதிமுக்கியக் கடமை.