காஞ்சிபுரம்: மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்தில், காஞ்சிபுரத்தில் இரு முறை நடத்திய கணக்கெடுப்பில், 11 ஆயிரம் நபர்கள் வீடு கட்டுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில், 2010ல் வீடு வழங்கும் திட்டத்திற்கு, குடிசை வீடுகளை ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுத்தனர். கடந்த 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்திட்டத்திற்கு பதிலாக, பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு அறிவித்து, பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.
வீட்டின் வகைப்பாடு
தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டத்தை மாற்றி தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்த வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து உள்ளார்.இதன்படி 2010ல் கணக்கெடுக்கப்பட்ட குடிசை வீடுகளை, ஜனவரி மாதம் மீண்டும் கணக்கெடுக்க துவங்கினர். மகளிர் குழுவினர், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பில், குடும்ப தலைவர், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டின் வகைப்பாடு, நிலம் வகைப்பாடு மற்றும் ஆடு, மாடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட 63 விதமான விபரங்களை சேகரித்தனர். இவற்றை, மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.
274 ஊராட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்களில் 28 ஆயிரத்து 282 குடிசைகளின் நிலை குறித்து மீண்டும் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகளில், 2,158 குக்கிராமங்களில், 56 ஆயிரத்து 856 குடிசைகள் என கணக்கெடுத்தனர்.
முதல் கட்ட கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8,140 பயனாளிகள் வீடு கட்டுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் எனவும், இரண்டாவது கணக்கெடுப்பு நடத்தியதில், 3,231 நபர்கள் வீடு கட்டுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் எனவும் மொத்தம், 11 ஆயிரத்து 371 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.