உற்பத்தி, 20 சதவீதம் குறைந்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை உச்சத்தை தொட்டதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 4.80 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.
ஜூன், 1ல், 480 காசாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக உயர்ந்து, கடந்த, 24ல், 535 காசாக உயர்ந்தது. முட்டை வரலாற்றில் இதுவே உச்சபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 26ல், மேலும், 15 காசு அதிகரித்து, கொள்முதல் விலை, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை எகிறி வருவது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இந்த விலை உயர்வு காரணமாக, வெளிமார்க்கெட்டில் சில்லரை விலையாக, ஒரு முட்டை, 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி
சுப்ரமணியம் கூறியதாவது:
கடந்த, ஒரு ஆண்டாக பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு, 400 காசில் இருந்து, 450 காசாக அதிகரித்துள்ளது. தற்போது, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், 30 காசு குறைத்தே கொள்முதல் செய்கின்றனர். அதனால், குஞ்சு விடுவதை பண்ணையாளர்கள் தவிர்த்துள்ளனர். அதன் காரணமாக, ஒரு கோடி கோழி குஞ்சு விடாமல், பெரும்பாலான பண்ணைகள் காலியாக உள்ளன. தினமும், 5 கோடி முட்டை உற்பத்தி செய்துவந்த நிலையில், தற்போது, 20 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், முட்டை தேவை அதிகரித்து கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
கொள்முதல் விலை உயர்வு காரணமாக, கத்தார், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, மாதம் தோறும், ஒரு கோடி முதல், இரண்டு கோடி முட்டை ஏற்றுமதியும், தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம், இந்த விலைக்கு அங்கு விற்பனை செய்ய முடியாது.
மழை காலம், சீதோஷன நிலை மாறினால் மட்டுமே, முட்டை கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலையில் இருந்து குறையாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே, பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.