செய்திகள் சில வரிகளில்... சேலம் | சேலம் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... சேலம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 சாய தொழிற்சாலைக்கு பூட்டு
சேலம், ஜூலை 1-
சேலத்தில் விதிமுறை மீறிய சாயத்தொழிற்சாலை மூடப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம், ஆண்டிப்பட்டி கிராமத்தில், அனுமதி பெற்று இயங்கி வந்த கணேசா டையிங் எனும் சாய தொழிற்சாலை, தன்னுடைய பூஜ்ஜிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர இயக்காமல் கழிவு நீரை கால்வாயில் வெளியேற்றியது. இதற்காக தொழிற்சாலையை மூடி, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இத்தொழிற்சாலைக்கு மாசு கட்டுப்பாடு விதிமுறை மீறலுக்காக ஏற்கனவே, 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது
அதிர்ச்சியில் பெற்றோர் சாலை மறியல்
மகுடஞ்சாவடி, ஜூலை 1-
இளம்பிள்ளை அருகே பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நேற்று பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை அருகே நடுவனேரி ஊராட்சி, 3வது வார்டில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 112 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வாட்டர் டேங்க் வீதியிலுள்ள, பள்ளியின் இரண்டு கட்டிடத்தில், ஒரு கட்டடம் மிகவும் மோசமடைந்து பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. மேலும் ஒரு கட்டடம் மோசமான நிலையில் இருந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகளை நேற்று காலை பள்ளிக்கு அழைத்து சென்றபோது, பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர் ஒன்று கூடி காக்காபாளையம் -- இளம்பிள்ளை பிரதான சாலையில், அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மகுடஞ்சாவடி போலீசார், மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,க்கள் ராஜா, முத்துசாமி ஆகியோர் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆறு மாதத்திற்குள் புதிய கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

சேலத்தில் 28 பேருக்கு தொற்று
சேலம், ஜூலை 1-
சேலம் மாவட்டத்தில் நேற்று, 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சியில், 12, தாரமங்கலத்தில், 3 பேர், மேச்சேரி, வீரபாண்டி, ஆத்துார், அயோத்தியாபட்டணத்தில் தலா, 2 பேர், நங்கவள்ளி, ஓமலுார், பனமரத்துப்பட்டி, தலைவாசலில் தலா, ஒருவர், கோவையிலிருந்து வந்த ஒருவர் என, 28 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜலகண்டாபுரம், ஜூலை 1-
நீர் வழித்தடத்தில் காவிரி-சரபங்கா நீரேற்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டத்தில், நங்கவள்ளி ஒன்றியத்தில் இணைக்கப்படும் ஏரிகளில், குப்பம்பட்டி முதல் ஜலகண்டாபுரம் மற்றும் கட்டிநாயக்கன்பட்டி ஏரிகளை இணைத்திட நீர் வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும். விளை நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி வி.ஏ.ஓ.,அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜலகண்டாபுரம் கிளைத்
தலைவர் குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தங்கவேல் பங்கேற்று, பல்வேறு கோஷங்களை எழுப்பினார். சங்க நிர்வாகிகள் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தல்: 6 பதவிக்கு 29 பேர் போட்டி
சேலம், ஜூலை 1-
சேலம் மாவட்டத்தில் ஒரு யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு, 16 பேரும், 5 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, 13 பேரும் போட்டியிடுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தேத்திகிரிப்பட்டி, மின்னம்பள்ளி, பூவனுார், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு, 16 வேட்பாளர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில், நடுப்பட்டியில், 3 பேர், தேவியாக்குறிச்சியில், 2 பேர், கிழக்கு ராஜாபாளையத்தில், 3 பேர், கூனாண்டியூரில், 3 பேர், பொட்டனேரியில், 2 பேர் இறுதிவேட்பாளர்களாக களத்தில்
உள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக சரிவு
மேட்டூர், ஜூலை 1-
மேட்டூர் அணைக்கு நாளுக்கு நாள் நீர் வரத்து குறைந்து கொண்டே வருவதால், நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நீர் வரத்து வினாடிக்கு, 2,836 கனஅடியாகவும், நீர் மட்டம், 105.40 அடியாகவும், நீர் இருப்பு, 72.01 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று காலை அணையின் நீர் மட்டம், 104.78 அடியாகவும், நீர் இருப்பு, 71.15 டி.எம்.சி.,யாகவும் காணப்பட்டது. நீர் வரத்து வினாடிக்கு, 2,559 கனஅடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரத்தை விட வெளியேறும் நீரின் அளவு அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X