உளுந்துார்பேட்டை அருகே எரிந்த நிலையில் இறந்து கிடந்த வியாபாரியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார், 34; மளிகைக் கடை உரிமையாளர். இவருக்கு வசந்தகுமாரி, 27 என்ற மனைவியும், தனுஷியா, 12; சஞ்சனா, 8; வைஷ்ணவி, 6; என 3 மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் செம்மணங்கூர் பகுதியிலிருந்து உளுந்துார்பேட்டைக்குச் செல்வதாக கூறிச் சென்ற சந்தோஷ்குமார் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து நேற்று முன்தினம் இரவு அளித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் உளுந்துார்பேட்டை கெடிலம் ஆற்றுப் பாலத்தின் அருகே ஒருவர், எரிந்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 6:00 மணியளவில் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருநாவலுார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் 6:00 மணியளவில் விசாரணை நடத்தினர். அதில் எரிந்து இறந்து கிடந்தவர் செம்மணங்கூரைச் சேர்ந்த காணாமல் போன சந்தோஷ்குமார் என தெரியவந்தது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கொலை தொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.