ஆரணி:வாடகை செலுத்தாததால், நகராட்சி கடையை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்த நிலையில், ஆரணி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர், பூட்டை உடைத்து கடையை திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, 6.50 கோடி ரூபாய் வாடகை நிலுவை உட்பட, 12 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.நிதி நெருக்கடி ஏற்பட்டு, ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது.இதையடுத்து, நகராட்சிக்கு வர வேண்டிய கடை வாடகை மற்றும் வரியை வசூலிக்க நகராட்சி கமிஷனர் தமிழ்செல்வி உத்தரவிட்டார்.
நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன் தலைமையில், ஊழியர்கள் கடந்த 7ம் தேதி, நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளருமான ரஞ்சித், உறவினர்கள் பெயரில் மூன்று கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இதற்கு சில ஆண்டாக சரியாக வாடகை செலுத்தவில்லை; நகராட்சி ஊழியர்கள் வாடகை கேட்டும் தரவில்லை. இதையடுத்து, மூன்று கடைகளையும் பூட்டி, நகராட்சி ஊழியர்கள், 'சீல்' வைத்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன், ரஞ்சித் கடைக்கு வைக்கப்பட்ட சீலை உடைத்து, வழக்கம்போல், பைனான்ஸ் நடத்தி வந்தார்.நகராட்சி ஊழியர்கள் கேட்டதற்கு, 'நான் கோர்ட்டில் பார்த்து கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.நகராட்சி கமிஷனர் தமிழ்செல்வி உத்தரவுப்படி, வருவாய் ஆய்வாளர் மோகன், ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் இரு தரப்பினரையும், நாளை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.