ராமேஸ்வரம்:''தமிழர் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜாதி பார்க்காமல் அனைத்து கிராம கோயில் பூஜாரிகளுக்கும் 15 நாட்கள் தமிழ், சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்ய பயிற்சி அளித்து, பூணூல் அணிவிக்கப்படுகிறது. இதன்பின் இவர்களுக்கு கோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்ய முழுத்தகுதி உண்டு.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.2000 வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை வழங்காததால் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம்.தமிழ் கலாசாரம், பண்பாடு பாதுகாக்கும் மக்களுக்கு முதல்வர் உறுதுணையாக நிற்க வேண்டும். பிற மதத்தினர் தங்களை தமிழர் என கூறுவதில்லை.பங்களாதேஷ், காஷ்மீரில் இருந்து ஊடுருவும் மக்களை தடுக்க குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில்களில் ஆகம விதி தெரியாத அதிகாரிகள் உள்ளதால் பூஜை, அபிஷேக முறைகள் தெரிவதில்லை. ஆகமவிதிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். முதல்வர் மம்தா அங்குள்ள உலமாக்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்குகிறார். தமிழகத்தில் கோயில் பூஜாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்.உதய்பூர் படுகொலை சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது. கொலையாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளது, என்றார். இணை பொதுச்செயலாளர் ராமசுப்பு, மண்டல அமைப்பாளர் சரவணன் உடனிருந்தனர்.