குன்னுார்;'தேயிலை துாளுக்கு, 85 ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்க முடியாது' என, தேயிலை வாரியம் கூறியுள்ளதால், உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரியில், தேயிலை தொழில் கடும் வீழ்ச்சி அடைந்து வருவதால், சிறு,குறு விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பிய மனுவுக்கு, கோல்கட்டா தேசிய தேயிலை வாரியம் அனுப்பிய பதிலில் கூறியுள்ளதாவது:தென் மாநிலங்களில், ஏல முறையில், தேயிலைத்துாளுக்கு அடிப்படை விலை, முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் முன்பின் இருக்கும்படியும், 10 சதவீதத்துக்கு மேல், புரோக்கர்களின் சந்தை நிலவரத்தை பொறுத்தும் மாற்றம் செய்யலாம் என, ஏலத்துக்கான அடிப்படை விலை நிர்ணய உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அனைத்து தேயிலை துாளுக்கும், 85 ரூபாய் நிர்ணயிப்பது, ஏல முறை நோக்கத்தை கேள்விக்குறியாக்கும். சந்தை நுகர்வு, தேவை, வினியோகம், தரம் ஆகியவற்றின் மூலம் விலை நிர்ணயம் செய்வதால், அடிப்படை விலை நிர்ணயிக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நீலகிரி தேயிலை சிறு விவசாயிகள் விழிப்புணர்வு மைய தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''ஐகோர்டில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு, 2007ல் பெறப்பட்டது. அதில், 'பசுந்தேயிலைக்கு, குறைந்தபட்ச விலை நிர்ணயம் கட்டாயம்' என, மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு, கோர்ட் உத்தரவிட்டது. தற்போது, கோர்ட் உத்தரவுக்கு, எதிரான நிலைப்பாட்டை தேயிலை வாரியம் அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.