பிராட்வே--பிராட்வேயில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மர மட்டை, அலுமினிய தாள், மக்கும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 12 வகையான பொருட்களையும் பரிந்துரை செய்துள்ளது.இவற்றை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கப்படுகிறது.அந்த வகையில் நடைபாதை கடைகளுக்கு 100 ரூபாயும்; மளிகை, மருந்து கடைகள் மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு 1,000 ரூபாயும்; வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ராயபுரம் மண்டல நல அலுவலர் வேல்முருகன் தலைமையில், பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துரை, சுகாதார ஆய்வாளர்கள் கவுசிக், இஸ்மாயில் ஆகியோர் கொண்ட சுகாதார ஆய்வாளர் குழுவினர், பிராட்வே, மலையப்பன் தெருவிலுள்ள குடோனில், நேற்று ஆய்வு நடத்தினர்.அங்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3,000 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.இதையடுத்து, அங்கிருந்த ௩ லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,000 கிலோ பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பைகள் உள்ளிட்ட வற்றை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்விதித்தனர்.