காஞ்சிபுரம்,-நம் நாளித ழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கோளிவாக்கம் ஊராட்சியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் மெயின் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதிவாசிகளுக்கு பாலாற்றில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் இருந்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதில், கோளிவாக்கம் காலனியில் கழிவு நீர் கால்வாயின் கீழ், நிலத்தடியில் புதைக்கப்பட்டு உள்ள குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக குடிநீர், கழிவு நீருடன் கலந்து கால்வாயில் வெளியேறி வருகிறது.இதனால், கோளிவாக்கம் பகுதிவாசிகளுக்கு வாந்தி, பேதி ஏற்படும் அபாயம் உள்ளதாக நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் நேற்று காலை 10:15 மணியளவில், கோளிவாக்கம் கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து கழிவுநீர் கால்வாயில் குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் கூறியதாவது:கோளிவாக்கம் ஊராட்சியில் அரிகிருஷ்ணன் என்பவர், ஊராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல், கழிவு நீர் கால்வாய் வெளியே செல்லும் பைப்லைனில் முறைகேடாக குடிநீர் இணைப்பு ஏற்படுத்திய பகுதியில் உடைப்புஏற்பட்டுள்ளது. மேலும், அந்த இணைப்பு வாயிலாக மின் மோட்டார் வாயிலாக குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு, குழாயில் ஏற்பட்ட உடைப்பும் சீரமைக்கப்படடது.இவ்வாறு அவர் கூறினார்.