சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டதில் இருந்து, ஏழு ஆண்டுகளில், 12.28 கோடி பேர் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும், 52.90 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பல பகுதிகளாக கட்டுமான பணி முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து, முதலில் ஆலந்துார் - கோயம்பேடு இடையே, 2015 ஜூன், 29ம் தேதி துவங்கப்பட்டது. அதன்பின், திட்டப்பணிகள் தொடர்ந்து முடிக்கப்பட்டு, தற்போது, விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை ரயில் போக்குவரத்து உள்ளது.
மெட்ரோ ரயில் துவங்கப்பட்ட நாளில் இருந்து, இந்த ஆண்டு ஜூன், 30ம் தேதி வரை, 12 கோடியே, 28 லட்சத்து, 24 ஆயிரத்து, 577 பேர் பயணித்துள்ளனர். இந்த ஆண்டு ஜன., 1 முதல், ஏப்., 30ம் தேதி வரை, 1.47 கோடி பேர் பயணித்துள்ளனர். ஜூன் 1 முதல், 30ம் தேதி வரை ஒரு மாததத்தில், 52.90 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இவர்களில், 'கியூஆர்' குறியீடு வசதியை பயன்படுத்தி, 13.18 லட்சம் பேரும், 'டிராவல் கார்டு' பயன்படுத்தி, 31.65 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். இவ்வகை பயணியருக்கு, 20 சதவீத கட்டண சலுகையும் கிடைக்கிறது.