சோழவரம்: மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள, 20 ஏக்கர் பரப்பளவு உடைய ஒன்பது நீர்நிலைகளை மீட்டுத்தரக் கோரி, பூதுார் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதுடன் நான்கு ஆண்டுகளாக மக்களை அலைக்கழித்து வருவதால், நீதிமன்றத்தை நாட உள்ளனர்.
சோழவரம் ஒன்றியம், பூதுார் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், ஏரி உள்வாய், குளம் என, 20 ஏக்கர் பரப்பளவில், ஒன்பது நீர்நிலைகள் இருந்தன. இதில் ஏரி உள்வாய் வழியாக, பூதுார் ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. காலப்போக்கில், மேற்கண்ட நீர்நிலைகளின் அருகில் விவசாயம் செய்து வருவோர், சிறிது சிறிதாக அவற்றை ஆக்கிரமித்தனர்.
அவற்றில் நெற்பயிர், வாழை, கால்நடைகளுக்கான தீவனப்பயிர் ஆகியவற்றை பயிரிட்டு, விவசாயம் செய்து வருகின்றனர்.மேற்கண்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக்காலங்களில் சிறிதளவு மழை நீரையும் சேமிக்க முடியாத நிலை உள்ளது.பூதுார் ஏரியின் உள்வாய், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியதால், ஏரிக்கு மழை நீர் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டு, ஏரி வறண்டு கிடக்கிறது.
மேற்கண்ட கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள நீர்நிலைகளை மீட்க, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், மாவட்ட கலெக்டர் என அதிகாரிகளிடம், 2018ல் இருந்து தொடர்ந்து கிராமத்தினர் மனு அளித்து வந்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின், 2021ல் மேற்கண்ட கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் வகைப்பாடு, பரப்பளவு, சர்வே எண், ஆக்கிரமிப்பு பகுதியில் செய்து வரும் விவசாய பயிர் உள்ளிட்ட விபரங்களை, வருவாய்த் துறையினர் கணக்கெடுத்தனர். அதன் விபரங்களை சோழவரம் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பினர்.
மேலும், ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வருவதாகவும், அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.ஒன்றிய நிர்வாகம், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகிறது.
ஒன்றிய நிர்வாகத்தை அணுகினால், வருவாய்த் துறையினர் அளவீடு செய்து தரவேண்டும் எனவும், வருவாய்த் துறையை அணுகினால், விபரங்களை கொடுத்துவிட்டோம் அவர்கள் தான் அகற்ற வேண்டும் எனவும், மாறி மாறி தட்டிக்கழித்து வருவதாக, கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில், தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது பொன்னேரி, சோழவரம் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், இங்கு மட்டும் அலட்சியம் காட்டப்படுவதாக, கிராமமக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
பெயர் குறிப்பிடாத சோழவரம் ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை தாசில்தார் உள்ளிட்டோர் உதவியின்றி, தனிப்பட்ட முறையில் சென்று, எங்களால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. வருவாய்த் துறையினரிடம் மேற்கண்ட குளங்களுக்கான வரை படம், ஆவணங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக தாசில்தாரிடம் முறையாக கடிதம் வாயிலாக தெரிவித்து, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கான விபரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஒன்றிய நிர்வாகம் எப்போது கூப்பிட்டாலும், நாங்கள் வருவதற்கு தயாராக உள்ளோம். ஆக்கிரமிப்பு நீர்நிலை பகுதிகளில், எச்சரிக்கை பலகையும் தயார் செய்து வைத்து உள்ளோம். ஒன்றிய நிர்வாகத்திடம் பேசி, விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். -பெயர் வெளியிடாத வருவாய்த் துறை அதிகாரி
நீதிமன்றம் செல்ல முடிவு
பூதுார் கிராமத்தில் ஒன்பது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை அறிந்து, அதற்கான ஆவணங்களை திரட்டினோம். மழை நீர் சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆறு மாதங்களுக்கு முன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடிதம் கொடுத்தனர். அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. வருவாய்த் துறை மற்றும் ஒன்றிய நிர்வாகம் மாறி மாறி அலைக்கழிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாட உள்ளோம்.- ஆ.சிவக்குமார், சமூக ஆர்வலர், பூதுார், சோழவரம்.