காங்கேயம் நகராட்சியில், கண்காணிப்பு கேமரா அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கேயம் நகராட்சி நான்காவது வார்டு பகுதி, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பகுதியாகும். குறிப்பாக முஸ்லிம் வீதி, சென்னிமலை சாலை, திருவள்ளுவர் வீதி பகுதிகள், பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ளன. இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. நகரின் மையப்பகுதியாக, வெளியூர் மற்றும் வெளிமாநில மக்களின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் அவ்வப்போது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவம் நடக்கிறது. அதேசமயம் பஸ் ஸ்டாண்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், இப்பகுதிகள் வழியாகத்தான் வெளியில் செல்ல முடியும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் திருடர்கள், சமூக விரோதிகள அவர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. நகரின் மற்றொரு மையப்பகுதியான, 11வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல இப்பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தால், குற்றச் சம்பவங்களை தடுக்கலாம். மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.