''கடந்த, 2020 - 21ல், 2,081 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய், 2021 - 2022ல், 2,467 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என, ஜி.எஸ்.டி., சேலம் மண்டல கமிஷனர் மீனலோச்சனி தெரிவித்தார்.
சேலம் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், ஜி.எஸ்.டி., தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இணை கமிஷனர் அருண் பிரசாத் வரவேற்றார். ஜி.எஸ்.டி., சேலம் மண்டல கமிஷனர் மீனலோச்சனி தலைமை வகித்து பேசியதாவது:
ஜி.எஸ்.டி., அமல்படுத்தி, 5 ஆண்டு நிறைவடைந்துள்ளது. பல வரிகளை ஒருங்கிணைத்து பெரும் மாற்றமாக ஜி.எஸ்.டி., அமைந்துள்ளது. இரு ஆண்டு தொற்றுநோய் சூழல் நிலவியபோதும், உலகின் முன்னணி பொருளாதாரமாக வளர்ந்து வருகிறோம். ஊரடங்கிலும் இணைய வழியில் ஒவ்வொருவரின் சந்தேகங்களை தீர்த்து வைக்க முயற்சித்தோம்.
வர்த்தகர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. வர்த்தகர்கள், துறை அலுவலர்கள், நாணயத்தின் இரு பக்கங்களை போன்று இணைந்து வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளோம். வர்த்தகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வர்த்தக வளர்ச்சிக்கு அவ்வப்போது வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அவற்றை வர்த்தகர் உள்ளிட்ட அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் பேசுகையில், ''ஜி.எஸ்.டி.,யால் நாடு முழுதும் சரக்குகளை கையாளும் ரயில்வே துறைக்கு பல நன்மைகள் உருவாகியுள்ளன. ரயில்வே வணிக வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. அதிலும் இணையதளம் மூலம் எளிதாக அனைவரும் அணுகும் தளமாக வரி விதிப்பு முறை உள்ளது சிறப்பம்சம்,'' என்றார்.
தொடர்ந்து சேலத்தில், பெண்களில் முதல் ஆட்டோ டிரைவரான லட்சுமி, நாட்டுப்புற பாடகி வசந்தி உள்பட பலர் கவுரவிக்கப்பட்டனர்.
பின், கமிஷனர் மீனலோச்சனி நிருபர்களிடம் கூறுகையில், ''சேலம் மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 61 ஆயிரம் பேர் வரி செலுத்துவோர். 2020 - 21ல், 2,081 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய், 2021 - 2022ல், 2,467 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என்றார்.