தங்கம் இறக்குமதி வரி உயர்வால் பவுனுக்கு, 880 ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழக தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்கத்தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
தங்கத்துக்கு அடிப்படை இறக்குமதி வரி, 7.5 சதவீதமாக இருந்தது. இன்று(நேற்று) முதல், 5 சதவீதம் உயர்ந்துள்ளது. விவசாய வரி உயர்த்தப்படவில்லை. சமூக நல வரி நீக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 30 வரை, அனைத்து வரிகளும் சேர்த்து இறக்குமதி வரி, 10.75 சதவீதமாக இருந்தது, ஜூலை, 1 முதல், 4.25 சதவீதம் உயர்ந்து, 15 சதவீதம் இறக்குமதி வரியாக உயர்ந்துள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், இறக்குமதி வரி உயர்வால், விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது டாலரில் தான் பணமாக கொடுக்க வேண்டும். டாலரைவிட இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகளவில் ரூபாய் வழங்க வேண்டும். வரி உயர்வால், 2 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், வரும் நாளில் விலை உயர வாய்ப்புள்ளது.
ஜூன் தொடக்கத்தில் முகூர்த்த நாளால் தங்கம் விற்பனை நன்றாக இருந்தது. பின் விற்பனை குறைய தொடங்கியது. பள்ளிகள் திறப்பால் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவர். இதனால், சில நாளாக தங்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
ஜூன், 30ல் கிராம் தங்கம், 4,675 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 4,785 ரூபாய்க்கு விற்பனையானது. பவுன், 37 ஆயிரத்து, 400க்கு விற்றது, 880 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து, 280க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 50 காசு குறைந்து, 63 ரூபாய், கிலோ, 500 ரூபாய் குறைந்து, 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இவ்வாறு அவர் கூறினார்.