''தீவன மூலப்பொருட்கள் விலையேற்றத்தால், முட்டை கொள்முதல் விலை, வரும் நாள்களில், ஆறு ரூபாய் மேல் உயரும்,'' என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் பேசினார்.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் பேசியதாவது:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. அதேபோல், தீவன மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால், முட்டை கொள்முதல் விலையும், 5.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது வரலாறு காணாத விலை உயர்வு என்று கூற முடியாது. ஒரு முட்டை உற்பத்தி செய்ய, 4.90 ரூபாய் வரை செலவாகிறது. வங்கிகளில் கடன் பெற்றிருந்தால், 5.30 ரூபாய் வரை செலவாகிறது. தற்போதைய முட்டை விலையை, மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரு முட்டையை, 6 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே பண்ணையாளர்கள் தொழிலை நஷ்டம் அடையாமல் பாதுகாக்க முடியும். மக்காச்சோளத்தை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் எம்.பி., சின்ராஜ், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.