பச்சை மிளகாய் விலை கிலோ, 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி, தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. கடந்த மாதம் கிலோ, 15 முதல், 20 ரூபாய்க்கு விற்ற பச்சை மிளகாய், நேற்று தலைவாசல் தினசரி மார்க்கெட், உழவர் சந்தைகளில், 28 முதல், 30 ரூபாய்க்கு விற்பனையானது. அதேநேரம் தக்காளி வரத்து அதிகரிப்பால் கிலோ, 12 முதல், 14 ரூபாயாக சரிந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழையால் செடிகள் வளர்ச்சியடைந்து கணிசமான அளவில் மகசூல் கிடைத்தது. தற்போது விளைச்சல் குறைய தொடங்கியுள்ளதால் பச்சை மிளகாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விற்ற தக்காளி, தற்போது, 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது' என்றனர்.