திருவள்ளூர்:''தொடக்க வேளாண் மை கூட்டுறவு சங்கம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில், இ - சேவை மையம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.கூட்டத்தில், புதுமாவிலங்கை கிராமத்தில் வண்டிப் பாதை அகற்ற வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.
மாம்பாக்கத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். மீன் வளர்ப்பிற்காக ஏரி தண்ணீரை வெளியேற்றப் படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை விவசாயிகள் தெரிவித்தனர்.விவசாயிகளிடம் இருந்து, 159 மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், கூட்டத்தில் பேசியதாவது:நடப்பு மாதத்தில், 2.50 லட்சம் கத்தரி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வேளாண் மற்றும் உழவர் நலத் துறையின் மூலமாக ஆடிப்பட்டத்திற்கு தேவையான கோ.8 பச்சைப் பயிறு விதைகள் 60 ஆயிரம் கிலோ விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 141 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா போதுமான அளவு இருப்பு வைக்க, கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும், இ - சேவை மையம் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.பின், மீன்வளம், வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.