திருத்தணி:ஊராட்சிகளில் இம்மாதம் 15ம் தேதி முதல், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, 87 புதிய மின் கம்பங்கள் நட்டும், மின் ஓயர்களுக்கு இடையூறாக செல்லும் செடி, மரக்கிளைகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் இருந்து, கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், சிறுகுமி, தாடூர், செருக்கனுார், மாம்பாக்கசத்திரம், எஸ்.பி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், மதுராபுரம், கொண்டாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய கிணறுகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
சில மாதங்களாக, மேற்கண்ட பகுதிகளில், மின் வினியோகம் அடிக்கடி துண்டிக்கப்பட்டும், மின் தடையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டும் வந்தனர்.இதையடுத்து, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் உத்தரவின்படி, மேற்கண்ட பகுதிகளில் மின் தடைக்கான காரணம், பழுதடைந்த மின் கம்பங்கள், நீண்ட துாரம் செல்லும் மின் ஒயர்கள் மற்றும் மின் ஒயர்களுக்கு இடையூறாக உள்ள செடி, மரக்கிளைகள் ஆகியவை கண்டறியப்பட்டன.
அதை தொடர்ந்து, கே.ஜி.கண்டிகை துணை மின் நிலைய உதவி பொறியாளர் ஆறுமுகம் தலைமையில், இளநிலை பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கி வேலையை மேற்கொண்டனர்.நேற்று வரை, பழுதடைந்த, 23 மின் கம்பங்களில், 17 புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.
நீண்ட துாரம் செல்லும் மின் ஓயர்களுக்கு இடையில், 70 மின் கம்பங்கள் கூடுதலாக பொருத்தப் பட்டு உள்ளன.மின் ஓயர்களுக்கு இடையூறாக செல்லும் மரக்கிளைகள், செடிகள், கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.இம்மாதம் 15ம் தேதி முதல், அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உதவி பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.