துாத்துக்குடி:விளாத்திகுளத்தில் நில விற்பனைக்கு தடையில்லா சான்று வழங்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குளத்துார் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பனையூர் முனியசாமிக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் குளத்துாரில் உள்ளது. இந்த நிலத்தில், 2014ல் அரசு இலவசமாக தந்த நிலமும் அடங்கும். அரசு வழங்கிய நிலத்தை, 10 ஆண்டுகளுக்கு முன் விற்க முடியாது. அதற்கு தடையில்லா சான்று பெற, குளத்துார் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமார், 30, என்பவரிடம் முனியசாமி விண்ணப்பித்தார்.
அவர், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்று சான்றளித்தார். அதை உறுதிப்படுத்தி வழங்க, வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன் 40, என்பவர், 3.30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.முனியசாமி இது குறித்து துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன் புகார் செய்தார். மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆர்.ஐ., செந்தில்முருகன் ஒரு புரோக்கர் மூலம், முனியசாமியிடம் லஞ்சத்தை தரும்படி கூறியுள்ளார்.
முனியசாமி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகனிடம் புகார் செய்தார்.போலீசார் கொடுத்த பணத்தை, முனியசாமி கிராம நிர்வாக அலுவலகத்தில் கொடுக்க சென்றார். தான் அருப்புக்கோட்டை சென்றதால், பணத்தை கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் கொடுக்கும்படி, செந்தில் முருகன் கூறினார். லஞ்ச பணத்தை வாங்கிய உமேஷ்குமார் கைது செய்யப்பட்டார். வருவாய் ஆய்வாளரையும் போலீசார் கைது செய்தனர்.