திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு, கால் வலி இருப்பதால் காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் காலணி அணிய யானை மறுக்கிறது.
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் ஜூலை 11ல் நடக்கிறது. தேரோட்டத்திற்கான கொடியேற்றம் இன்று காலை நடக்கிறது. யானை காந்திமதிக்கு, 52 வயதாகிறது. அதிக எடை, வயோதிகத்தால் கால் வலியினால் ரதவீதிகளில் நடப்பதில் சிரமம் உள்ளது.
கேரளாவில் யானைகளுக்கு காலணி அணிவிக்கும் பழக்கம் உள்ளதை அறிந்த பக்தர் ஒருவர் ஏற்பாடில், 12 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு தோல் காலணிகள் திண்டுக்கல்லில் தயார் செய்யப்பட்டு, கோவிலுக்கு வழங்கப்பட்டன.யானைக்கு காலணிகளை பார்த்ததும் பயம் வந்துவிட்டது.
பாகன் ராமதாஸ் காலணிகளை அணிவிக்க முயற்சித்தார். இருப்பினும் காந்திமதி மறுத்து விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பயிற்சி அளித்து, ஜூலை 11-ல் நடக்கும் தேரோட்டத்தில் யானை காலணிகள் அணிந்து ரத வீதிகளில் வலம் வரும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.