சிறார்கள், பருவ வயதினர், ஆய்வாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கலை ரசனை கொண்டவர்கள், நாவல் விரும்பிகள், சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் முதியவர் என, சகலமானவர்களும் விரும்பும் வகையிலான ஏராளமான புத்தகங்கள், இங்கே கொட்டிக் கிடக்கின்றன.
பெரும்பாலும், ஏற்கனவே வாசிக்கப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், குறைந்தபட்ம், 50 சதவீதம் முதல் அதிகபட்சம் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இந்த புத்தக 'பேக்டரி' உருவாகியது குறித்து அதன் உரிமையாளர் தீபக் கூறியதாவது:நான் இன்ஜினியரிங் படிக்கும் போது, புத்தகங்கள் வாங்க பல இடங்களுக்கு அலைந்துள்ளேன்.இதனால் அப்போதே, அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்ற திட்டம் தோன்றியது.
அதே நேரம், அனைத்து தரப்பினரும் வாங்கிப் படிக்கும் விலையில் விற்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், வீட்டில் ஒரு 'ஷெல்ப்'பில் ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஐந்து ஆண்டுகள் பார்த்த வேலையை விட்டு, புத்தக 'பேக்டரி'யை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். அது தற்போது விருட்சமாக வளர்ந்துள்ளது.என்னிடம், பல்வேறு நாடுகளில் பதிக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. இவற்றை இந்திய அளவில், 'ஆன்-லைன்' வாயிலாகவும் விற்பனை செய்கிறேன். புத்தக 'டெலிவரி'க்காக, 'கூரியர்' நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துள்ளேன்.
தற்போது, ஆங்கில புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறேன். வரும் காலங்களில், மாநில மொழி புத்தகங்களையும் விற்பனை செய்ய உள்ளேன்.பல தரப்பினர் எனக்கு, நன்கொடையாக புத்தகங்களை அளிக்கின்றனர். அவற்றை சேகரித்து, ஆதரவற்ற சிறார்கள் இல்லத்தில் கொடுப்பதையும் ஒரு கடமையாக செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்--