ஆம்பூர்;கால்வாய் அமைக்கும் போது, மின் கம்பத்தை தள்ளி வைக்காமல், அதனோடு சேர்த்து பள்ளம் எடுத்து, கான்கிரீட் அமைத்து, அதிகாரிகள் அறிவாளித்தனமாக வேலை செய்துள்ளனர். இதனால் மின்கம்பம் உறுதி இழந்து, விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.வேலுார், காளிகாம்பாள் தெருவில் பைக் மீது சிமென்ட் சாலை போடப்பட்டது. சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் அரசு ஜீப் மீது தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இது வெளிச்சத்திற்கு வந்த பின், வேலுார் மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை அகற்றி புதிதாக சாலை அமைத்தனர்.இந்த விவகாரத்தை தொடர்ந்து, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், மின் கம்பத்தை நகர்த்தி அமைக்காமல், அதை சுற்றி பள்ளம் தோண்டி, கான்கிரீட் கால்வாய் அமைத்துள்ளனர்.ஆம்பூர் நகராட்சி, 35வது வார்டில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய் பணி நடக்கிறது. பெத்தலகேம், நான்காவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்த போது, அங்கிருந்த மின் கம்பத்தை அகற்றாமல், கால்வாய் அமைத்துள்ளனர். இதனால் அந்த கால்வாயில் தண்ணீர் செல்வது தடைபடும் என்பதுடன், மின்கம்பம் உறுதியிழந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.