கோவை:கோவை, ஒண்டிபுதுாரில் மொபைல் போன் பறித்த கும்பலை பைக்கில் துரத்திச் சென்றார், 26 வயது இளம்பெண். அவரை பைக்கோடு உதைத்து கீழே தள்ளி படுகாயம் ஏற்படுத்திய மூவரை, சிங்காநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, இருகூரை சேர்ந்தவர் ஜனனி, 26. ஐ.டி., நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சூலுார் சென்று விட்டு, கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.ஒண்டிபுதுார் மேம்பாலம் அருகே வந்தபோது, அவருக்கு போன் அழைப்பு வந்தது. வாகனத்தை ஓரமாக நிறுத்திய ஜனனி, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.அவ்வழியாக பைக்கில் வந்த மூவர், ஜனனி தனியாக நிற்பதை கவனித்தனர். அவர்களில் ஒருவன், ஜனனி வைத்திருந்த மொபைல் போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டான். அடுத்த வினாடியே பைக்கில் மூவரும் தப்பிச்சென்றனர்.அவர்களை விடக்கூடாது என்றெண்ணிய ஜனனியும், தனது பைக்கில் துரத்திச் சென்றார். திருட்டு வாலிபர்களை பிடிக்கும் வகையில் நெருக்கமாக சென்றபோது, மூவரில் ஒருவன், ஜனனி வாகனத்தை காலால் எட்டி உதைத்தான். நிலை தடுமாறிய அவர், சாலையில் உருண்டு விழுந்தார். தலை, முதுகு, தோள்பட்டையில் படுகாயம் அடைந்த ஜனனிக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மொபைல் போனை பறித்தது மட்டுமின்றி, பெண்ணை உதைத்து கீழே தள்ளியும் விட்ட வாலிபர்களை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பதிவாகியுள்ள, 'சிசி டிவி' காட்சிப்பதிவுகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.