சேலம்,-மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. அங்கிருந்து, இந்தியாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதில் சேலம் மாவட்டத்தில் லீபஜார், ஆனந்தா இறக்கம், வ.உ.சி., மார்க்கெட், உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு, 2 மாதங்களாக பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை உயராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த, 25ல், மார்க்கெட்டுக்கு, 15 'லோடு'(ஒரு லோடு, 25 டன்) பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது. நேற்று, 5 லோடு உயர்ந்து, 20 லோடு வந்தது. மொத்த விலையில் பெரிய வெங்காயம் தரத்துக்கேற்ப கிலோ, 15 முதல், 22 ரூபாய்க்கும், சில்லரை விலையில், 20 முதல், 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.அதேபோல், சின்ன வெங்காயம் கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி, சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பெரம்பலுார், துறையூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம், 1,000 மூட்டை(ஒரு மூட்டை, 50 கிலோ) கொண்டு வந்த நிலையில், நேற்று, 1,500 மூட்டையாக அதிகரித்தது. தரத்துக்கேற்ப மொத்த விலையில் கிலோ, 10 முதல், 15 ரூபாய், சில்லரை விலையில், 20 முதல், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.