குளித்தலை,-கரூர் மாவட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு, முதல்வர் வருகையால், குறைந்தளவு அரசு, தனியார் பஸ்களே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
கரூரில், நேற்று நடந்த அரசு விழாவில், 80 ஆயிரத்து, 750 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார். இந்த விழாவுக்கு பயனாளிகளை அழைத்து வரவும், திரும்ப வீட்டில் விடவும், அரசு, தனியார் பஸ்கள் கரூர் மாவட்ட முழுவதும் அனுப்பப்பட்டன. இந்நிலையில், கிராம பகுதியிலிருந்து கரூர், திருப்பூர், ஈரோடு பகுதியிலிருந்து டெக்ஸ், கட்டுமானம், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வழக்கம்போல் வேலைக்கு செல்பவர்கள், நேற்று காலை, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனுார் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டில் அலுவலர்கள், பொதுமக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். அரசு, தனியார் பஸ்கள் எண்ணிக்கை குறைந்தது, 30 நிமிடத்திற்கு ஒரு பஸ் என்றளவிலேயே இயக்கப்பட்டன.இதனால், பஸ்சில் அளவுக்கு அதிகமாக, பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டி கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்பவர்கள், தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.