ஈரோடு,-ஈரோட்டில் போலி ஆதார் அட்டை தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிப்பு செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் கண்ணன், 45; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் இவர் ஒரு மனு அளித்தார். அதில், 'வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான, 7.8 ஏக்கர் நிலம் போலி ஆவணம் தயாரித்து, கிரயம் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்ட நிலையில், வழக்கின் தன்மை கருதி, மாவட்ட நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோமதி, எஸ்.ஐ. ஜெயலட்சுமி, எஸ்.எஸ்.ஐ., பச்சமுத்து, ஏட்டு சிலம்பரசன் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கண்ணனின் தம்பி மூர்த்தி, 18 ஆண்டுக்கு முன் காணாமல் போனார். அவரது பெயர் கொண்ட தகர வேலை செய்யும் நபரான, ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, 63; ஆதார் அட்டையில் தந்தை பெயர் மற்றும் இன்ஷியலை மாற்றி, ஈரோடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சித்தையன்-சந்திரகலா பெயரில், 2020ல் கிரயம் செய்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது நிலம் குறித்து, வில்லங்கம் போட்டு பார்த்தபோது இது தெரிந்தது. அதன் பின் புகாரளித்தார். விசாரணையில் சித்தையன்-சந்திரகலா உள்ளிட்ட ஏழு பேர், ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை கிரயம் செய்ததை கண்டுபிடித்தோம். நிலத்தை அபகரித்த வழக்கில் மூளையாக செயல்பட்ட, மூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார். மற்ற ஐந்து பேரும், முன் ஜாமின் பெற்று விட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.