மதுரை : பட்டியல் இன ஆண், கிறிஸ்தவ மத பெண் இடையே நடந்த திருமணத்தை, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மனுதாரர் தரப்பில், 'பெண் 18 வயதை பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்தாவது:
திருமண பதிவிற்காக உரிய படிவத்தில் 'நோட்டீஸ்' அளிக்க வேண்டும் என, சிறப்பு திருமணச் சட்டப் பிரிவு தெரிவிக்கிறது. அதை, திருமண பதிவு அதிகாரி அறிவிப்பு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்; அது ஆய்விற்கு உட்பட்டது.அப்படி நோட்டீஸ் வந்ததன் மூலம் தான், 72 வயது ஈ.வெ.ராமசாமி, 27 வயது மணியம்மை திருமணம் பற்றிய விபரம் தெரிய வந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி அவரை விட, 25 வயது மூத்தவர்.அத்தகைய புகழ்பெற்ற தம்பதியருக்கு, வயது என்பது வெறும் எண் தான்.
வயது வெறும் எண் தானா என்றால், எப்போதும் அப்படி இல்லை. மனுதாரர் ஹிந்து; லெடியா கிறிஸ்தவர். அவர்கள் வெளிப்படையாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள், இரு ஹிந்துக்களுக்கு இடையே மட்டுமே செய்ய முடியும். மனுதாரர் மற்றும் லெடியா இடையே நடந்த திருமணத்தை, ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் நடந்ததாக கருத முடியாது.சிறப்பு திருமணச் சட்டப்படி, மனுதாரர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மனுதாரரின் கோரிக்கையை சார் -- பதிவாளர் நிராகரித்தது சரியே; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.