மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணம், இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம் பல்லவர் கால கலைச் சிற்பங்களை காண, பயணியர், சுற்றுலா வருகின்றனர். பெரும் பாலோர், கார், வேன், பஸ் என, தனி வாகனங்களில் வருகின்றனர். இவ்வாகனங்களுக்கு, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், நுழைவுக் கட்டணம், மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம், நிறுத்துமிட கட்டணம் என, வசூலிக்கின்றன. இரண்டு கட்டணங்களையும், பேரூராட்சி நிர்வாகம், ஒன்றாக வசூலித்து, இரண்டு நிர்வாகங்களும், சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றன.
ஆண்டுதோறும், மார்ச் இறுதியில் பொது ஏலம் நடத்தி, தனியாருக்கு ஓராண்டு குத்தகை உரிமம் வழங்கப்படும். கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஐந்து முறை பொது ஏலம் நடத்த முயன்றும், ஆரம்ப கேட்புத்தொகை அதிகம் என்பதாக கருதி, குத்தகைதாரர்கள் ஏலம் கோரவில்லை. இறுதியாக, சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு நாளில், அறிவிப்பிற்கு சற்றுமுன் அவசர ஏலம் நடத்தி, 1.61 கோடி ரூபாய்க்கு குத்தகை உரிமம் அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31ம் தேதி, குத்தகை காலம் முடிந்த நிலையில், முன்பாகவே ஏலம் நடத்தவேண்டிய நிலையில், பேரூராட்சி நிர்வாகம் தவிர்த்து, ஏப்ரல் முதல் இந்நிர்வாகமே வசூலித்தது.இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இங்கு நடக்கவுள்ள சூழலில், சர்வதேச வீரர்கள், சிற்பங்களை காண வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணத்தை, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.